Friday, July 31, 2009

வழிகாட்டி!!!

அம்மா!

உண்ண உணவு

கொடுத்தாள்

உணவு உண்ண

கற்றுக்கொடுத்தாள்!

கைபிடித்து "அ" எழுதக்

கற்றுக்கொடுத்தாள்

கைபிடித்து பள்ளிக்கும்

அழைத்து சென்றாள்

அம்மா!

பருவத்தில் உலகை

அடையாளம் காட்டினாள்

என்

கல்லூரி வரை தோழியாய்

விலங்கினாள்

இத்தனை கொடுத்தவள்

நல்ல துணைவனை

கொடுக்க மாட்டாள்

என்ற

காதலை

மட்டும் எப்படி நான்

நம்பினேன் ???

காதல்???

காதல்

பணம் இருப்பவனுக்கும்

வருகிறது

பணம் இல்லாதவனுக்கும்

வருகிறது

படித்தவனுக்கும் வருகிறது

படிக்காதவனுக்கும் வருகிறது !

காதல்!

தன் கையால்

தன் இதயத்தை

தானே கிளித்துக்கொள்ளும்

குரூரன் !

காதல்!

காதலிப்பவர்களை தவிர

மற்றவர்களை நெருங்க விடா

சிறைச்சாலை!

காதல்!

இருவர் இணைய

பல இதயங்களை

கொலை செய்யும் கூற்றுவன் !

காதல்!

வெளித்தெரியும் நிஜத்தையும்

வெளித்தெரியாமல் மறைக்கும்

கண்ணின் புரை!

இதயங்கள் பார்த்து

இணைந்தது

இலக்கியக் காதல்!

சரீரம் பார்த்து வருவது

சமகாலக் காதல்!

கண்டதும் காதல்!

காணாமலும் காதல்!

பேச்சிலும் காதல்!

பேசாமலும் காதல்!

இண்டர்நெட்டில் காதல்!

SMS இல் காதல்!

இத்தனை இருந்தும்

இதயத்தில் இருக்கிறதா

காதல்????......

தேடல்!!!

அக்னியாய் கொதிக்கும்

வேளை

நீண்ட நெடிய

நெடுஞ்சாலை

ஒற்றை மிதிவண்டியில்

நான் மட்டும் !

முகத்தில் அடிக்கும்

புழுதி

நீரைத் தேடும்

உதடு

கொதிக்கும் பாலையில்

நான் மட்டும் !

ஓங்கி உயர்ந்த

தென்னை வரிசை

நடுவில் சலசலக்கும்

நீரோடை

சின்னஞ்சிறிய படகில்

நான் மட்டும் !

சில் வண்டுகள்

ரீங்காரமிட

ஊசியாய் என்னுள்

குளிர்

பச்சை புற்களின்

சலசலப்பு

பறவைகளின் மெட்டு

இத்தனைக்கும் நடுவில்

நான் மட்டும் !

விண்ணை முட்ட எத்தனிக்கும்

கட்டிடங்கள்

நெருங்கி வளர்ந்த

காங்கிரீட் காடு

இங்கும்

நான் மட்டும் !

தேடுகிறேன் மனிதனை !

எங்கு நோக்கியும்

கிடைக்கவில்லை !

தேடும் நான் மட்டும்

என்ன மனிதனா ?

விடை தெரியா கேள்வி

என்னுள் !

என்னுள் விழுந்த விதை

விருட்சமாகி இன்று

தேடலாய் இறைவனிடம் !

அவனிடமும் கிடைக்கவில்லை

விடை !

எங்கு கிடைப்பான்

மனிதன் ?

யாரிடம் கிடைக்கும்

விடை ?

இதயத்தின் தேடலுக்கு

நீயாவது

விடை சொல்வாயா

வானவில்லே ?

இறைவன்...

பாதம் படா இடத்தில்

மலர்களை

தேடினேன் இறைவா !

உனக்கு சரம் தொடுக்க !

தொடுத்தும் விட்டேன்

வந்தது குழப்பம்

மனதில் !

யாருக்கு அணிவிக்க ?

ராமனுக்கா ?

அல்லாவுக்கா ?

ஏசுவுக்கா ?

இதயம் தேடியது

இறைவனை !

பெயர்களை அல்ல !

எங்கிருக்கிறாய் நீ ?

ஒளியிலா ?

காற்றிலா ?

நீரிலா ?

மனிதரிலா ?

இல்லை நான் கட்டிய

சரத்திலா ?

எவ்வுருவில் இருந்தாலும்

வெளிப்படுத்து உன்னை !

இவ்வுலகின் குழப்பம்

தீர !

Thursday, July 30, 2009

ஆழ்கடல் தேடி

முத்து குளிப்பான்

இவன் !

தேடிய முத்துக்களோ

நகை கடையில்!

மனைவியின்

கழுத்திலோ வெறும்

மஞ்சள் கயிறு !

விழி மூடாமல் காத்திருந்தேன்

உன்

வரவை நோக்கி !

அந்த இரவு

முழுவதற்குமாய் எத்தனையோ

வார்த்தைகள்

என் எண்ண ஓட்டத்தில் !

வந்தாய் நீ !

கிளம்புகிறேன்

தொழில் நிமித்தமாய்

என்றாய் !

என் வார்த்தைகளை

உன் மனம்

அறியுமோ ? இல்லையோ ?

நம் படுக்கைஅறை

சுவர்கள்

நன்றாய் அறியும்

அதன் வெப்பத்தை ....

தாலி கட்ட ஆள்

பிடிக்கிறார்கள் !

வாடகைக்கு வீடு போல

விளம்பரம் செய்து !

வேண்டாமாம்

மனதில் குடியிருப்பவன் .....

எனக்கெதற்கு இத்தனை
ஒப்பனை ?
கண்டவனும் வந்து
கலைப்பதற்கா ?

கற்பனை...

இறுக்க மூடிய

விழிகளுக்குள் ஒரு

வெண்திரை !

எந்த ஊடகத்திலும்

கானா மனக்காட்சி !

வானவில்லாய் !

மழைத்துளியாய் !

எத்துனை

சந்தோஷ சாரல்கள் !

அடங்காத குதிரையாய் !

காட்டாற்று வெள்ளமாய் !

இந்த முரட்டுத்தனத்தை

அடக்க

இறைவனிடமும் இல்லையே

தடுப்பு !

நடைபயிலும்

சிறுகுழந்தை போல

தத்தி தாவி வரும்

இந்த நீரோடையில்

குளிக்காதவர் உண்டோ

இவ்வுலகில் !

அண்டசராசரத்தை ஆளும்

ஈசனே கூட

கற்பனை என்னும்

விஞ்ஞானமே !

ஏன் உன்னால் கூட

மாற்ற இயலவில்லை

இந்த கற்பனை காட்சியை

நிஜத்தின் சாட்சியாய் ...

தமிழ் அறிந்த மாந்தர்

எவரேனும் கூறுங்களேன்

இதற்கு மறுமொழி !

என் மேல் அவள்

கொண்ட நேசத்திற்கு

ஈடாக

என்னிடம் வார்த்தையும்

இல்லை !

அதனுடன் போட்டியும்

இல்லை !

ஆண் - பெண்

நட்பை கேலி செய்யும்

இவ்வுலகில் என் மேல்

அவள் கொண்ட

நேசம்

நட்பிற்கும் மேல் !

ஆனால்

காதல் அல்ல !

அவள் எனக்கு

தோழிக்கும் மேல் !

ஆனால்

காதலி அல்ல !

தோழனுக்கு மறுபால்

தோழி

மட்டும் தானா ?

இலக்கணம் மீறிய

எங்கள் தோழமைக்கு

தமிழ் கூறும் நல்லுலகமே

புது வார்த்தை

கூறு ....

வாழ்க்கை!!!

உன்னை

கடந்து விடும் தூரம்

என்று

நடை போட்டால் ?

கீழ்வானச் சிவப்புப் பந்தின்

தூரமாகத் தெரிகிறாயே!

உச்சி வெய்யிலின் உக்கிரத்தைப்

போல எரிக்கும்

உன் வெப்பத்தில்

உருகி

வெளிவந்து பிரகாசிக்க

நான் என்ன

தங்கமா ?

மனிதனய்யா !

கருணை கொள்

மனிதனிடம் ....

காய்ந்து போன என்

உதடுகள்

தன்னை ஈரப்படுத்திக்கொள்ள

கேட்கிறது

உன் உதடுகளை !!!...

கடலில்

வலை விரிக்கும் இவர்களுக்காக

கரையில்

வலை விரிக்கும் வியாபாரிகள் ........

பாதை?

எங்கே செல்கிறோம் ?

வெட்டுக்கத்தியாலும்

வெடிகுண்டுகளாலும் உருவான

பிணங்களின் மீது நடந்து !

கௌதமன் அவதரித்த

பூமியாம் இது !

அன்று

" அவதரித்தவன் "

இன்று

" பிறந்திருந்தால் "

அவனும் பழகி இருப்பானோ ?

இந்த பாதையில்

நடை பயில......

மரணம்

இது இறைவன்

அளிக்கும் தண்டனையா ?

அல்லது விடுதலையா ?

மரணம் கானா

மக்களும்

மரணம் கானா

இல்லமும்

இல்லையே இவ்வுலகில் !

மரணத்தின் தொடர்ச்சி

இன்னொரு மரணமாகாது !

பிறக்கும் போதே

எழுதிவிட்டான் நாட்கணக்கை !

பல பெயர்களும்

சூட்டிவிட்டான் படைத்தவன்

இதற்க்கு !

கொலையாம் !

தற்கொலையாம் !

விபத்தாம் !

இயற்கை மரணமாம் !

இதில்

மரணித்தவனை நோவதில்

பயனில்லை !

ஏற்படுத்தியவனை நோவதிலும்

பயனில்லை !

கேளுங்கள் படைத்தவனிடமே !

இன்னும் எத்துனை

மணித்துளிகள்

உள்ளதடா எனக்கு

என்று !

விடியல்

விடிந்தும் விடியா

பொழுது !

கீழ்வானம் எங்கும்

வண்ணச்சிதறல்கள் !

எந்த ஓவியனின்

தூரிகை

செய்த மாயம் இது ?

வியந்தன என்

விழிகள்

இதன் அளவைக் கண்டு !

எத்துனை

ரவிவர்மாக்கள் பிக்காசோக்கள்

தேவையாடா

இதை வரைய ?

நொடிப் பொழுதில் வரையும்

உன்னை

என்னவென்று அழைக்க ?

இறைவன் என்றா ?

இயற்கை என்றா ?

இரவு முழுவதும் பேருந்தில் பயணம். விடிந்தும் விடியாத பொழுதில் பேருந்தின் சன்னலை விட்டு வெளியே நோக்கிய போது........

தாய் மண்

வானத்தில் எங்கும்

வேட்டு சத்தம் !

தீபாவளி அல்ல

தோழா!

பதுங்கு குழியில்

நித்தம்

எம் வாழ்வு !

உயிர் பயம் அல்ல !

நம்மை நம்பும்

உயிர்களுக்கான ஒரு

பாதுகாப்பு !

அரவணைப்பு தேடி

வந்தோம்

தாய் மண்ணை நோக்கி !

கரிய இருளில்

எம் உறவுகளுடனான

அந்த பயணம்

வேண்டாம்

எம் எதிரிக்கு கூட !

சுதந்திர காற்றை

சுவாசித்தவுடன் எம்

காதில் விழுந்த

முதற் சொல்

அகதி என்று !

வேண்டாம் சகோதரா !

எமக்கு அந்த

அவப்பெயர் !

தாய் மண்ணை

மீண்டும் அடைந்த

நான்

உம்மை வேண்டுகிறேன்

எம்மை " உன் சகோதரனாய் "

ஏற்க வேண்டி .....

மண்டபத்தில் இருக்கும் தாயகம் திரும்பியோர் முகாமில் ஒரு விழாவில் கலந்து கொள்ள நேர்ந்த போது, நமது மக்கள் அவர்களை "அகதி" என்று மிக சாதாரனமாக அழைத்த போது ஏற்படுத்திய‌ வலி... இந்த கவிதை thinnai.com என்ற மின்னஞ்சல் இதழில் வெளிவந்திருக்கிறது.

வலி

ஆழிப்பேரலையின்

ஆழம் அறிந்தது

இவனது

ஆழ்மனம் மட்டுமே ....

கானல் நீராய்
தெரிந்த நீ !
இன்று மழைத்துளியாய்
என்னை நனைக்கிறாய் !
குளிர்விக்கும்
உன் துளிகள் என்
குடிநீராய் மாறும் காலம்
எது?
நீராக சொல்லியதில்
கோபமா பெண்ணே
உனக்கு ?
தாகம் தணிப்பது
நீயும் நீரும்
மட்டும் தானே .........

ஆசீர்வதிக்கப்பட்ட

ஈசலுக்கு

ஒரே நாளில்

மரணம் !

சபிக்கப்பட்ட எனக்கு ....???

எழுதிப் பழக்கமில்லை என்றேன்

எழுதடா உன் காதலி

பற்றி !

கட்டளை இட்டாள் என்

அன்பு தோழி !

உயிர் பற்றி எழுத

உடலுக்கு ஏது

உரிமை ......

தாய்மை

இவள்

தன் தொப்புள் கொடியின்

உறவை அறுத்ததால்

அவன் ஜனனம் !

இவள்

தன் பாசக்கொடியை

அறுத்தால்

அவன் சவம் !

உயிர் கொடுத்தவள்

உயிர் அறுக்கமாட்டாள்

என்று

கை காட்டுகிறான்

முதியோர் இல்லம்

நோக்கி ..........

மரண வலி

இது வலியா?

இன்பமா?

உணர்ந்தவர்கள் கூறியதில்லை !

உணராதவர்கள்

உணர்ந்து கொள்ளட்டும்

என்றோ ?

பெண்

உன் தீட்டிய

புருவத்தைப் போல

நீ

எப்போதுமே ஒரு

கேள்விக்குறி தான் ...........

கவிதைக்கு பொய்

அழகு என்றான்

கவிஞன் !

சகியே !

அது உன் கவிதைக்கு !

உனக்கல்ல !

முரண்பாடு!

எந்த விலங்கும்

இன்றி

சிறைப் பறவையாய் இருந்தேன்

இத்தனை நாட்களாய் !

நாளை

தாலி எனும்

விலங்கை கொண்டு

என்னை

ஆக்கப் போகிறாய்

சுதந்திர பறவையாய் !

என்ன முரண்பாடு ?

வானவில்

வானத் திரையின்

மீது

மேக ஓவியனின்

வண்ணச் சிணுங்கல்கள் !!!!

கவிஞன்???

எண்ணத்தை எழுத்தாக்குகிறேன் !
கவிதை என்கிறாய்
நீ !
அடுத்த பிறப்பிலாவது
நான் கவிஞனாக
வரம் கேள்!